8-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.
இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.
ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.
ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.
கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.
அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.
விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.
அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.
1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.
வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.
1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.
முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.
இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.
வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.