Total Pageviews

Wednesday, January 19, 2011

கப்பலோட்டிய தமிழன் யார்?


நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.


"தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு

ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை "சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி" என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்" என்று "விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்" என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.

அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?

வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!

தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.

1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.

தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.

"சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி" என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – "தேவர் முரசு", செப்டம்பர் 1981.

(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)

என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.

வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?

சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?

தேசியச் செம்மல்:

1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.

இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).

இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?

எந்த அடிப்படையில் எழுதினார்?

இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?

உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

("செக்கிழுத்த செம்மல்" திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)

எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. yes, Kappalottiya Tamilar PONDIDHURAI THEVAR , This is 100% believable by after read this truth words.

    ReplyDelete

Popular Posts

Pages

Popular Posts