Total Pageviews

Friday, October 28, 2011

தேவர் திருமகன் - வைகோ உரை

 
 




அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எண்ணிப் பார்த்தால், பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர். ஆகவேதான் தேவர் திருமகனாரைப் பற்றி மாசி வீதியில் பேசவேண்டும் என்பது, ஏதோ வழக்கமாக அல்ல. என் கடமைகளில் ஒன்றாக, எனக்குக் கிடைத்த பேறாகக் கருதி இங்கே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இந்த இளைஞர் சமுதாயம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.

அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். 'எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது, பாய்தான் தெரியும்' என்று சொன்ன தேவர் திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.

சென்னையில் தேவர்

அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். 'அம்ஜத் பார்க்' என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.

'ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்' என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, 'நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்' என்று சொல்கிறார்.

பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், 'இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?' என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம்.

'நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?' என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், 'சொல்லுங்கள் செய்கிறேன்' என்கிறார்.

தேவர் வாழ்விலே திருப்பம்

'ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?' என்றார். 'தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்' என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.

இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, 'உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்' என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்!

நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.

முதல் மேடை

1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார்.
இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, 'சகோதர சகோதரிகளே' என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

களப்போர்

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்,.............................

முழுஉரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts